கொரோனாவால் குணமடைந்தவர்களுக்கு உள்ள ஆபத்து; வௌியான அதிர்ச்சி தகவல்

நுரையீரல் பாதிப்பு ஏற்படும் கொரோனாவின் தாக்கம்

கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து மீண்ட பின்னரும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்பவர்களுக்கு அரச வைத்தியசாலைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஹோமாகம மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளின் சுவாச நிபுணர் டொக்டர் துஷார கலபட தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் உருவாகிய மக்களில் 5 முதல் 10 சதவீதம் பேர் நிரந்தர நுரையீரல் பாதிப்பு கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் இரு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

இவர்களில் ஒரு தரப்பினர் தீவிர நிலைமையை அடையக் கூடியவர்களாகவும் ஏனையோர் அறிகுறிகள் அற்ற வீடுகளிலேயே சிகிச்சை பெறக் கூடிய நிலைமையிலும் உள்ளவர்களாவர்.

இந்த இரு தரப்பினரில் தீவிர நிலைமையை அடைந்து பின்னர் குணமடைந்தவர்களில் 10 – 15 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படக் கூடிய வாய்ப்புள்ளது.

நோய் குணமான சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு மற்றும் உடல் வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபக மறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

நுரையீரல் பாதிப்பு ஏற்படும் கொரோனாவின் தாக்கம்

இரண்டு வாரங்களுக்கு மேல் அறிகுறிகள் நீடித்தால், வைத்தியசாலையின் சுவாச பிரிவிலும், மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கிளினிக்கிலோ சிகிச்சை பெறுவது பொருத்தமானது என்றும் அவர் கூறினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விடயங்களை அவர் தெரிவித்தார்.

Leave a Reply