பல இலட்சம் ரூபா பணத்தை சுருட்டிக்கொண்டு மாயமான அதிவேக வீதியின் காசாளர்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை காசாளர் பணத்துடன் மாயம்

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை களனிகம இடைமாறல் அலுவலகத்தின் பொறுப்பிலுள்ள இரு பெட்டகங்களில் இருந்த 14 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பணத்துக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதான காசாளர் ஒருவரும் மாயமாகியுள்ளமை முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் பண்டாரகம பொலிஸ் நிலைய குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை யில் தனது கடமை நேரம் தொடர்பில் கடமைக்கு வந்துள்ள காசாளர் ஒருவர், நிலுவையில் உள்ள பணத் தொகையை சரி பார்த்தபோது அதில் 14 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். இந்நிலையிலேயே அதிகாரிகளின் அறிவுறுத்தல் பிரகாரம் பிரதான பொறியியலாளர் ஒருவர் இது தொடர்பில் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

இது குறித்த உள்ளக ஆய்வின்போது, காசாளர்களின் பெட்டகத்திலிருந்தும், அன்றாட வருமானத்தை வைக்கும் பெட்டகத்திலிருந்தும் பணம் திருடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை காசாளர் பணத்துடன் மாயம்

இந் நிலையில், ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணையில், பிரதான காசாளர் ஒருவர் மாயமாகியுள்ளமை தெரிய வந்துள்ள நிலையில், அவரைத் தேடி தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சூதுக்கு அடிமையாகியவர் என நம்பப்படும் குறித்த காசாளர், புளத்சிங்ஹல பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவர் வதியும் வீட்டில் அவர் இல்லை என குறிப்பிட்ட பொலிஸார், அவரது கையடக்கத் தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

Leave a Reply