ஜனாதிபதியின் பிரகடனம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதியின் பிரகடனம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளானது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அதன் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அந்தக் கட்டளைச் சட்டத்தின் iiஆவது பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் அத்தியாவசிய உணவு பொருள் விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவானது தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படும் தருணத்திலேயே பிரகடனப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் சுகாதார ரீதியான பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அது தொடர்பான அவசரகால சட்டம் ஏன் இதுவரை பிரகடனப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply