பிரபல வர்த்தகர் கொலை; 04 வருடங்களின் பின் அவிழ்ந்த மர்மம் – மகன் கைது

குற்ற புலனாய்வு துறை மகனை கைது செய்தது

அடம் எக்ஸ்போ உள்ளிட்ட 9 நிறுவனங்களின் உரிமையாளரான பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுஸைன், இயற்கையாக மரணிக்கவில்லை எனவும் அது ஒரு கொலை எனவும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அக்கொலை தொடர்பில் நான்கு வருடங்களின் பின்னர் அவரது இளைய மகன் சிஐடி எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிஐடியின் பொது மக்கள் முறைப்பாட்டுப் பிரிவுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சூட்சுமமான விசாரணையில் கொலைச் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

குறித்த வர்த்தகரின் மரணம் இயற்கையானது அல்ல, அது ஒரு கொலை என 2019 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட மூவர் கொண்ட விசேட சட்ட வைத்திய நிபுணர்களின் பிரேத பரிசோதனையின்போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் கூறினார்.

இதனையடுத்தே கோட்டே வீதி, எதுல் கோட்டே எனும் முகவரியைச் சேர்ந்த 37 வயதான சந்தேக நபர், விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை மையப்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது அவரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஜூன் மாதம் 9 ஆம் திகதி பிரபல வர்த்தகர் கபீர் அப்பாஸ் குலாம் ஹுஸைன் அவரது அலுவலகத்தில் உயிரிழந்திருந்தார். அப்போது மாரடைப்பு காரணமாக அவர் இயற்கையாக உயிரிழ்நததாக கூறி அவரது சடலம், இறுதிக் கிரியைகளின் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2018 ஆகஸ்ட் 16 ஆம் திகதி குறித்த மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சிஐடி.யின் பொதுமக்கள் முறைப்பாட்டு பிரிவுக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பில் சிஐடி பணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் இடம்பெற்றன.

சொத்துக்களை தனது உடைமையாக்கிக்கொள்ளும் நோக்கில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக சிஐடியினர் சந்தேகிக்கும் நிலையில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply