இரட்டைக் கோபுர தாக்குதலில் சவுதிக்கு தொடர்பு – 20 ஆண்டுகளின் பின் வௌியான ஆதாரம்

இரட்டை கோபுர தாக்குதல் - சவுதி அரேபியாவுக்கு தொடர்பு?

இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று நேற்றுடன் 20 ஆண்டுகள் முடிந்த நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக எஃப்.பி.ஐ அமைப்பின் ரகசிய அறிக்கை பொதுவெளியில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவை நிலைகுலைய வைத்த நாள் 2001 செப்டம்பர் 11. நியூயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக மையத்தின் இரண்டு கட்டடங்களில் 2 விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

சில நிமிடங்களில் மூன்றாவது விமானம், வாஷிங்டன் டிசி அருகே அமெரிக்க ராணுவ தலைமையகத்தை தாக்க, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விழுந்தது.

4 விமானங்களையும் கடத்தி தாக்குதல் நடத்திய 19 பேர் உள்பட 2,996 பேர் இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் மாண்டனர். இதில் இரட்டைக் கோபுரத்தில் இறந்தவர்கள் மட்டும் 2,606 பேர்.

அமெரிக்க இரட்டை கோபுரத்தை இடித்தது யார்?

இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

தாக்குதல் திட்டத்தின் மூளையாக ஒசாமா பின்லேடன் செயல்பட்டார். இந்த தாக்குதலை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ராணுவம் படையெடுத்து, பங்கரவாதிகளை வேட்டையாடியது.

ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகள் இடைவிடாது தேடிய அமெரிக்கப் படை இறுதியில் 2011ல் பாகிஸ்தானில் வைத்து கொன்றது. இந்த தாக்குதல் தொடர்பான ஆவணங்களை அமெரிக்கா ரகசியமாகவே வைத்திருந்தது.

இதனை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இரட்டை கோபுர தாக்குதலில் சவுதிக்கு தொடர்பா?

இந்நிலையில், தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் கழித்து தற்போது ஆவணங்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. வெளியிட்டுள்ளது.

அதில், சவுதி அரேபியா தூதரக அதிகாரி ஒருவருக்கு இந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், சவுதி அரேபிய அரசுக்கு இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் ஆவணங்களில் இல்லை.

விமானத்தை கடத்திய 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்.

சவுதி தூதரக அதிகாரியிடம் எஃப்.பி.ஐ. நடத்திய விசாரணையில், விமான கடத்தலில் ஈடுபட்ட இருவரை தனது குடியிருப்பில் தங்கிக்கொள்ள தான் அனுமதித்ததாகவும் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் பயணம் செய்ய உதவியதாகவும் தெரிவித்துள்ளார்.

இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற ஓர் ஆண்டிற்கு முன்னதாக 2000ஆம் ஆண்டிலேயே கடத்தல்காரர்கள் அமெரிக்காவுக்கு வந்து, விமானத்தை இயக்கும் பயிற்சியைப் பெறத் தொடங்கியிருந்தனர்.

அந்த காலகட்டத்தில் சவுதி உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்பட்ட உமர் பயோமி என்பவர் இரண்டு கடத்தல்காரர்களையும் அவ்வப்போது சந்தித்ததாகவும் எஃப்.பி.ஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரட்டை கோபுர தாக்குதல் - சவுதி அரேபியாவுக்கு தொடர்பு?

தற்போது வெளியான எஃப்.பி.ஐ அறிக்கையில் “சவுதி தூதரகத்தில் உமர் பயோமிக்கு மிக உயர்ந்த அந்தஸ்து இருந்தது.

போக்குவரத்து, நிதி, தங்குமிடம் உள்ளிட்ட பலவற்றில் உமர் பயோமி கடத்தல்காரர்களுக்கு உதவியுள்ளார்.

மேலும், உமர் பயோமிக்கு ஜிகாத் மீது அதிக நம்பிக்கை இருந்ததாகவும் ஜிகாத் குறித்து அடிக்கடி பேசுவார் என்றும் நாங்கள் (FBI) நேர்காணல் செய்த நபர் தெரிவித்தார்” என்று இன்று வெளியிடப்பட்ட ரகசிய ஆணவத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக அவரை பணியில் இருந்து நீக்க சவுதி அரேபிய தூதரகம் விரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டது என்பது குறித்தும் இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2009 மற்றும் 2015 ஆண்டுகளில் இந்தத் தாக்குதல் தொடர்பாக சில முக்கிய நபர்களுடன் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் எஃப்.பி.ஐ அமைப்பு இந்த ஆவணத்தை கடந்த 2016, ஏப்ரல் 4ஆம் தேதி உருவாக்கியிருந்தது.

இதுநாள் வரையில் ரகசிய ஆவணமாக இருந்த இது இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்கள் அமெரிக்காவில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு உதவியவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கிடையே நடைபெற்ற டெலிபோன் உரையாடல் தொடர்பான தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

அதேநேரம் பலரும் எதிர்பார்த்தபடி சவுதி அரசுக்கு இந்த தாக்குதலில் நேரடியாகத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரங்களும் இதில் இல்லை.

இருப்பினும், இது முதல் ஆவணம் தான் என்றும் வரும் காலங்களில் வெளியாகும் ரகசிய ஆவணங்களில் சவுதி அரசுக்கும் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் இடையே இருந்த தொடர்பு அம்பலமாகும் என இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் ஜிம் கிரெண்ட்லர் தெரிவித்தார்.

Leave a Reply