மாகாணங்களுக்கு இடையிலான தடை நீக்கப்படவில்லை – சுகாதார பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான தடை நீக்கப்படவில்லை - சுகாதார பணிப்பாளரின் அதிரடி அறிவிப்பு

நாடு அச்சுறுத்தலான சூழலில் உள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை நீக்க எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை, எனினும் அத்தியாவசிய தேவைகள் மற்றும் அரச ஊழியர்களின் சேவையை கருதி குறைந்தளவிலான தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையொன்று காணப்படுவதாக சுகாதார வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில் இன்று (01) தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது.

இந்நிலையில் நாட்டின் தற்போதுள்ள நிலைமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

ஆரம்பத்தில் இருந்த கொவிட் -19 வைரஸ் பரவலை விடவும் இப்போது மோசமான டெல்டா வைரஸ் பரவல் நிலையொன்று காணப்படுகிறது. ஆகவே மக்கள் மிகவும் அவதானமாக தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

அதேபோல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்த இன்னமும் நாம் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை. அநாவசியமாக மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியாது.

ஆனாலும் தற்போதுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவும், அரச ஊழியர்கள் பணிகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ள காரணத்தினால் அவர்களுக்காக விசேட அனுமதிகளை வழங்கி அதற்காக கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.