நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வரும் தடை

பொலித்தீன் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை

பொலித்தீனை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உக்கிச் செல்லாத ´லஞ்ச் சீட்´ இன்று முதல் தடை செய்யப்படுவதுடன் அவற்றின் தயாரிப்பு விற்பனை மற்றும் விநியோகத்திற்கான தடையும் நடைமுறைக்கு வருகிறது.

இதற்கமைய, இவற்றின் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன தடை செய்யப்படுவதாக சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள லஞ்ச் சீட்டுக்களை மாத்திரம் விற்பனை செய்துக்கொள்வதற்காக ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் லஞ்ச் சீட் தயாரிப்பு, விநியோகம், விற்பனை என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

லஞ்ச் சீட் தடை திட்டத்திற்கு நாட்டிலுள்ள பிரதான வர்த்தக வலையமைப்புகள் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலை அமைச்சரவை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பிளாஸ்ரிக்கினால் தயாரிக்கப்படும் கத்தி, கரண்டி, முள்கரண்டி, ஊதுபத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன், உரிய பருமைக்கும் குறைவான பொலித்தீன்கள், பிளாஸ்ரிக் உற்பத்தியிலான பூமாலைகள், இடியப்பத் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளும் தடை செய்வதற்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.