பெண் ஒருவரின் கை, கால்களை கட்டி நான்கு பேர் இணைந்து செய்துள்ள செயல்

தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நால்வர் கைது

பெண்ணொருவரின் கை மற்றும் கால்களை கட்டி வீட்டிலிருந்து தங்க நகைகளை கொள்ளையிட்ட நால்வர் இரத்தினப்புரி – பம்பஹின்ன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் இல்லத்தில் நீர் கட்டண பட்டியல் விநியோகிக்க வரும் ஒருவரே இந்த கொள்ளை சம்பவத்திற்கு திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவத்திற்கு முகங்கொடுத்த பெண்ணின் கணவர் இந்திய பிரஜை என்பதோடு அவர் அண்மையில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் குறித்த பெண்ணின் பிள்ளைகள் இந்தியாவில் வசித்து வருவதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

பம்பஹின்ன பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த குறித்த பெண்ணின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட தங்கம் 13 லட்சம் ரூபா பெறுமதியுடையதென தெரிவிக்கப்படுகின்றது.

சி.சி.ரி.வி காணொளி காட்சிகளின் உதவியுடன் சந்தேக நபர்கள் பயணித்த முச்சக்கரவண்டி அடையாளம் காணப்பட்டதோடு அதன் சாரதி சமனலவெவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் பலாங்கொடை நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டமையை அடுத்து அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.