மக்கள் நினைப்பது போல் கொரோனா பயங்கர நோய் அல்ல

கோவிட் வைரஸ் தொற்று என்பது கொடிய நோய் அல்ல, அது சாதரண காய்ச்சல் எனவும், ஆகையினால் மக்கள் வீண் அச்சம் கொள்வது தவறானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கோவிட் வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் வீண் அச்சம் கொள்வது தவறு. வீண் அச்சமே மரணத்தை ஏற்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

நாட்டை தொடர்ந்து முடக்குவது கோவிட் ஒழிப்புக்கு ஒரு தீர்வாக அமையாது, பலம் வாய்ந்த நாடுகள் கூட தற்போது சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

ஆகவே நாட்டு மக்கள் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றினால் நாமும் வழமை நிலைக்கு திரும்பலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள் என்றும், மேலும் 14 சதவீதம் பேர் இலேசான முதல் மிதமான அறிகுறிகளை மட்டுமே கொண்டிருப்பதாக அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

கோவிட் வைரஸ் தொற்று பயங்கரமான நோய் அல்ல

அவர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே கடுமையான நோய் வருகிறது. இலங்கையில் இறப்பு விகிதம் 1.9 சதவீதம் மட்டுமே. உலகளாவிய இறப்பு விகிதம் இரண்டு சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.

எனவே, மக்கள் நினைப்பது போல் இது பயங்கரமான நோய் அல்ல. எனவே, தேவையில்லாமல் மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்தக் கூடாது. சுகாதார வழிகாட்டுதல்களின்படி அதனுடன் வாழ வேண்டும்.

கொரோனாவை விட அதிகமான மக்கள் புற்றுநோய், மதுபானம் மற்றும் புகைபிடிப்பால் நோய்களுக்கு ஆளாகிறார்கள். மேலும், உலகில், கொரோனாவைக்காட்டிலும், தற்கொலைகள் அதிகமாக இடம்பெறுவதாகவும் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.