ரிசாத் பதியுதீன் மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொலை மிரட்டல் விடுத்தாரா ரிசாத் - நீதிமன்ற உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சிறைச்சாலை வைத்தியருக்கு கொலை மிரட்டல் விடுத்தபோது வைத்தியருடன் இருந்த கைதியை எதிர்வரும் 25ஆம் திகதி ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, இன்று (23) உத்தரவிட்டார்.

கைதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை பதிவு செய்யுமாறு பொரளை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

புதிய மெகசீன் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரான ரிஷாத் பதியுதீன், கடந்த 15ஆம் திகதி தன்னைத் திட்டியதாகவும் கொலை மிரட்டல் விடுத்தாகவும் வைத்தியரான பிரியங்க இந்துனில் புபுலேவெல வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பில், சிறைச்சாலை அதிகாரி உள்ளிட்ட மூவரிடம், இன்று (23) நான்கு மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.

குற்றப்புலனாய்வு பிரிவினரால், சிறைச்சாலை அதிகாரி மற்றும் சிறைக்காவலர் இருவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.