ஜேர்மனியில் பீசா டெலிவரி செய்யும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர்

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சயீத் அஹ்மத் ஷா சாதத் ஜெர்மனியில் பீசா டெலிவரி செய்யும் பையை முதுகில் மாட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து முந்தைய அரசில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்.

தாலிபான்கள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்ற பயமே இதற்கு பிரதான காரணம். ஆப்கானிஸ்தானின் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்தவர் சயீத் அஹ்மத் ஷா சாதத்.

அஷ்ரப் கனியின் அமைச்சரவையில் கடந்த 2018ம் ஆண்டு இணைந்த சயீத் அஹ்மத் ஷா சாதத், அவருடனான வேறுபாடு காரணமாக தனது பதவியை 2020ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

பின்னர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி ஜெர்மனிக்கு சென்றார். அங்குள்ள லீப்ஜிக் என்னும் பகுதியில் அவர் வசித்து வருகிறார்.

சயீத் அஹ்மத் ஷா சாதத் தற்போது ஜெர்மனியில் பீசா டெலிவரி செய்யும் நபராக பணியாற்றி வருவதாக அல்-ஜசீரா ( Al-Jazeera ) ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பீசா டெலிவரி செய்யும் பையை முதுகில் மாட்டிக்கொண்டு அஹ்மத் ஷா சாதத் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்களை அந்த ஊடகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் பிசா டெலிவரி

ஆசியா மற்றும் அரபு நாடுகளில் உயர் பதவிகளில் இருக்கும் நபர்கள் தங்களின் வாழ்க்கையை வாழும் விதத்தை மாற்ற தனது கதை ஒரு ஊக்கியாக செயல்படும் என்று சாதத் ஸ்கை நியூஸ் ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலைப் பட்டங்களை பெற்றவர் சாதத் .

சவுதி அரேபியா உட்பட 13 நாடுகளில் அரம்கோ மற்றும் சவுதி டெலிகாம் நிறுவனம் உட்பட 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு துறையில் 23 ஆண்டுகள் பணியாற்றியவர் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சயீத் அஹ்மத் ஷா சாதத்.