கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் 15 நாட்களின் பின் வீடு திரும்பிய அதிர்ச்சி சம்பவம்

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் 15 நாட்களின் பின் வீடு திரும்பிய அதிர்ச்சி சம்பவம்
கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தை அவரது உறவினர்கள் அடக்கம் செய்துவிட்ட நிலையில் 15 நாள்கள் கழித்து மீண்டும் உயிருடன் வீடு திரும்பிய சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவை அடுத்த ஜகயாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முத்யால கடய்யா. இவரது மனைவி பெயர் கிரிஜம்மா (75).

மே மாதம் 12-ம் தேதி கிரிஜம்மா கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் விஜயவாடாவில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிரிஜம்மாவை பார்ப்பதற்காக அவரது கணவர் முத்யால கடய்யா மே 15-ந் தேதி விஜயவாடா அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கு மருத்துவமனை ஊழியர்கள் கிரிஜம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகக் கூறி மருத்துவமனை பிணவறையிலிருந்து ஒரு சடலத்தை கடய்யாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொரோனா தொற்றால் உயிரிழந்த தங்கள் தாயார் சடலமாக வீடு திரும்பியதை அறிந்து பதறிப் போன கிரிஜம்மாவின் பிள்ளைகள் உறவினர்களுடன் சேர்ந்து இறுதி சடங்குகளைச் செய்து மயானத்தில் உடலை அடக்கம் செய்திருக்கின்றனர்.

கொரோனா மரணம் என்பதால் உடல் முழுதும் துணியால் சுற்றப்பட்டு மறைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இறுதிச்சடங்கில் கொரோனா அச்சம் காரணமாகக் கிராமத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை.

கிரிஜம்மாவின் மறைவால் நொந்துபோயிருந்த குடும்பத்துக்கு அடுத்த சில நாள்களிலேயே இன்னும் ஓர் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

கிரிஜம்மாவின் மகன் ரமேஷ் (35) கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென மே 23-ம் தேதி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இந்நிலையில், மே 15-ந் தேதியன்று விஜயவாடா மருத்துவமனையில் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட கிரிஜம்மா 15 நாள்கள் கழித்து ஜூன் 2-ம் தேதி உச்சி வெயிலில் தலையில் முக்காடு போட்டபடி ஜகயாய் பேட்டைக்கு மீண்டும் உயிரோடு திரும்பியிருக்கிறார்.

அதைப் பார்த்துப் பதறிப்போன கிராம மக்கள் உயிரிழந்த கிரிஜம்மாவின் ஆவி தான் உலாவிக் கொண்டிருப்பதாக நினைத்து அலறியடித்து ஓட்டம் பிடித்திருக்கின்றனர்.

கிரிஜம்மா கிராம மக்கள் தன்னைக் கண்டு அஞ்சி ஓடியதை வியப்பாகப் பார்த்தபடி தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருக்கிறார். உயிரிழந்த தன் மனைவி வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துபோன கடய்யா, பின்னர் சுதாரித்துக்கொண்டு அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்பதனை உறுதி செய்தார்.

பின்னர், கண்களில் நீர் பெருக குடும்பத்தினர் அனைவரும் கிரிஜம்மாவை நலம் விசாரித்தனர்.

அப்போது தான் பல திடுக்கிடும் விஷயங்கள் குடும்பத்தினருக்கு விளங்கியது. மே 12-ல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரிஜம்மாவை அவர் கணவர் வேறு அறைக்குச் சென்று தேடி இருக்கிறார்.

அவர் அங்கு இல்லாமல் போகவே மருத்துவமனை ஊழியர்களிடம் பதற்றமாகக் கேட்டிருக்கிறார். அப்போது ஊழியர்களும், அலட்சியமாக உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் சடலத்தை உறுதி செய்யாமல் அவரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.

சடலம் மாற்றிக் கொடுக்கப்பட்டது கூட தெரியாமல் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்து விட்டு துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.

மருத்துவமனையின் வேறு அறையில் பத்திரமாகச் சிகிச்சைபெற்று முழுமையாகக் குணமடைந்த கிரிஜம்மாவை மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்யவே, அழைத்துச் செல்ல குடும்பத்தினர் யாரும் வராததால் அவராகவே ஆட்டோ பிடித்து வீடு திரும்பியிருக்கிறார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தகவல் – விகடன்