இலங்கைத் தமிழ்க் குடும்பத்தை விடுவிக்க வலுக்கும் ஆதரவு

இலங்கைத் தமிழ்க் குடும்பத்திற்கு வலுக்கும் ஆதரவு

இலங்கைத் தமிழ்க் குடும்பத்தை விடுவிக்குமாறு கூறி ஆதரவாக அவுஸசதிரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்குச் சென்று அகதிகளான இலங்கைத் தமிழ்க் குடும்பத்தை விடுவிக்குமாறு முன்வைக்கப்படும் அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ளன.

அந்த குடும்பத்தின் இரண்டாவது மகள் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ளன.

குறித்த சிறுமியின் பெற்றோரான நடேசன் – பிரியா தம்பதி படகு ஒன்றின் மூலம் கடந்த 10 வருடத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியா சென்றனர்.

எனினும் கடந்த 2018ஆம் ஆண்டு அவர்களின் புகலிட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டமையினால் அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும், நீதிமன்ற உத்தரவு ஒன்றிற்கமைய அந்த நாடு கடத்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. கடந்த 10 நாட்களாக நடேசன் பிரியா தம்பதிகளின் 3 வயதான மகள் தாருணிக்கா சுகயீனமடைந்துள்ளார்.

3 வயதான தாருணிக்கா மற்றும் 6 வயதான கோபிகா ஆகியோர் நினைவு தெரிந்த நாள் முதல் கிறிஸ்மஸ் தீவு அகதிகள் முகாமிலேயே வசித்து வருகின்றனர்.

உரிய சூரிய வெப்பம் கிடைக்கப்பெறாமை காரணமாக விட்டமின் டி குறைபாடு உள்ளிட்ட பல நோய்களால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் அண்மையில் சுகயீனமடைந்த அவர்களின் இரண்டாவது மகள் தாருணிக்கா அவரது தாயுடன் மெல்போனில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு அந்த நாட்டு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுமி அடங்கலான குடும்பத்தினரை விடுவிக்கக் கோரிய அழுத்தங்கள் வலுப்பெற்றுள்ளன.

அத்துடன் அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் குடியுரிமையை வழங்குமாறு சட்டத்தரணிகள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரி வருகின்ற போதிலும் இதுவரை எந்தவிதமான பதில்களும் கிடைக்கப்பெறவில்லை.

எனினும் அவர்களுக்குச் சாதகமான பதிலை வழங்கக்கூடிய பொறுப்பு அந்த நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு உள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவின் கடுமையான கொள்கை

ஆஸ்திரேலியாவில் கடுமையான அகதிகள் கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி படகு மூலம் நாட்டுக்குள் வர முற்படுவோரை அகதியாக கருதி அடைக்கலம் வழங்குவதை அந்நாட்டு அரசின் விதிகள் அனுமதிப்பதில்லை.

மேலும், படகு மூலம் ஒரு நாட்டில் இருந்து மக்கள் கடத்தப்பட்டு வரும் வழக்கத்தை நிறுத்தவே இந்த கொள்கை கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக ஆஸ்திரேலிய அரசு கூறுகிறது.

ஆனால் அரசின் இந்த போக்கு, அகதிகள் உரிமைகளை மீறும் வகையில் இருப்பதாக மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்து வருகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்து அகதியாக தஞ்சம் கோருவோரை பிரதான நிலப்பகுதிக்குள் சேர்க்காமல் கிறிஸ்துமஸ் தீவில் தடுத்து வைக்கும் திட்டத்தை 2013இல் ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியது.

ஆனால், அப்போதே அடைக்கலம் கோரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர்.

பிரதான நிலப்பகுதி நீதிமன்றங்களிலும் அகதிகள் விவகாரங்களை கவனிக்கும் துறைகளிலும் இவர்களின் விண்ணப்பங்கள் மற்றும் மனுக்கள் ஆண்டுக்கணக்கில் பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையுடன் இன்னும் அந்த தீவிலேயே சில அகதிகள் காத்திருக்கிறார்கள்.

Leave a Reply