கருப்பு பூஞ்சை நோய் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை

கருப்பு பூஞ்சை நோய் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எச்சரிக்கை

கருப்பு பூஞ்சை நோய் நிலமையை எதிர்கொள்வதற்கு இலங்கை தயராக வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்வதற்கு அன்டிபயோட்டிக்ஸ்களை அரசாங்கம் சேமிக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரசாத் கொலம்பகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறையில் கருப்பு பூஞ்சை பரவியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தகவல் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பல மருத்துவ நிபுணர்களுடன் நான் இது குறித்து ஆராய்ந்தேன் ஆனால் அவ்வாறான பாதிப்பு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் துரதிஸ்டவசமாக இந்த நோய் பரவினால் அதனை எதிர்கொள்வதற்கு தயாராகயிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பரவுவதால் இலங்கையில் அது நுழைந்திருக்கலாம் என தெரிவித்துள்ள கொலம்பகே கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட கொவிட் நோயாளிகளும் ஏனைய நோயாளிகளும் 24 மணிநேரத்தில் உயிரிழப்பார்கள்.

அவர்களது நோய் எதிர்ப்புசக்தி இந்த நோயை எதிர்ப்பதற்கான வலிமையற்றதாக காணப்படுவதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக முன்னரே மருந்துகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் தயாராகயிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருப்பு பூஞ்சை என்றால் என்ன?

மியூ கோர்மைகோஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் இப்போது புதிதாக வந்தது அல்ல. பல காலமாக அத்தகைய பாதிப்பு இருந்து வருகிறது.

பாக்டீரியா வைரஸ் போல காற்றிலும் சுற்றுப்புறத்திலும் உள்ள பூஞ்சை கிருமிகள் நாசி வழியே உடலுக்குள் சென்று தொற்றை ஏற்படுத்துகின்றன.

அவை மெல்ல மெல்ல உடலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவுகின்றன. கவனிக்காவிடில் அது கண்களை முதலில் பாதிக்கும் பின்னர் மூளைப்பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களுக்கு இத்தகைய தொற்று ஏற்படலாம். முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கண் பார்வை இழப்பு உறுப்புகள் பாதிப்பு உச்சபட்சமாக உயிரிழப்பு கூட நேரிடலாம்.

கருப்பு பூஞ்சை நோய் அறிகுறிகள் என்ன?

தீவிர தலைவலி, கண் எரிச்சல், கண் சிவப்பாகுதல், வாய், மூக்கு, கண் பகுதிகள் கருப்பாக மாறுதல், கண்ணில் வலி மற்றும் வீக்கம்,சைனஸ் பாதிப்பு திடீரென பார்வை குறைதல்.

கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 2 வாரம் முதல் 6 மாதங்கள் வரை சிகிச்சையளிக்க வேண்டும். சிலருக்கு பல்நோக்கு சிகிச்சைகள் அவசியம்.