தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தவர் ஆற்றில் குதித்து மரணம்

தங்கச் சங்கிலியை கொள்ளையடித்தவர் ஆற்றில் குதித்து மரணம்

அம்பலாங்கொடை – மீட்டியாகொடை பகுதியில் தாதியர் ஒருவரின் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற ஒருவர் ஆற்றில் குதித்தமையை அடுத்து நீரில் மூழ்கி மரணித்துள்ளார்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார்.

இன்று காலை மல்வென்ன தொடருந்து நுழைவாயில் பகுதியில் உந்துருளியில் வந்த ஒருவர் குறித்த தாதியரின் சங்கிலியை கொள்ளையிட்டுள்ளார்.

பின்னர் அந்த பகுதியிலுள்ள மக்கள் அவரை துரத்தியமையை அடுத்து அருகில் இருந்த ஆற்றில் குதித்த நிலையில் அவரை பிடித்து மக்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எவ்வாறாயினும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது மரணித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்போது போதை பொருட்களுக்கு அடிமையானவர்களால் தங்க சங்கிலியை கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.