சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை

சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளென எவருமில்லை எனத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, வழக்குகளை விசாரிக்காது, நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதை, தனிப்பட்ட வகையில் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனால் கேட்கப்பட்ட வாய்மூல வினாவுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பதிலளிக்கையில், ”நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில், அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. இலங்கை தண்டனைக் கோவைச் சட்டத்தின் கீழ், அரசியல் குற்றங்களுக்காக எவரும் தடுத்து வைக்கப்படவும் இல்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இதுவரையில் ஒருவருக்கு மரண தண்டனை, இருவருக்கு ஆயுள் தண்டனை, மூவருக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட்டுள்ளன.

தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனைக்கு எதிராக ஒருவரும், ஆயுள் தண்டனைக்காக இருவரும், சாதாரண தண்டனைக்காக மூவரும் இதுவரையில் மேன்முறையீடு செய்துள்ளனர்” என்றார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழோ அல்லது, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்கிற சந்தேகத்தின் பேரிலோ, தற்போது எவரும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கவில்லை” எனத் தெரிவித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “வழக்குகளை விசாரிக்காது நீண்டகாலமாக எவரும் தடுத்து வைக்கப்படுவதை, சட்டத்தரணி என்ற வகையில் தனிப்பட்ட ரீதியில் என்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் கூறினார்.