பிரிட்டன் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை

பிரிட்டன் விமானங்கள் இலங்கையில் தரையிறங்க தடை

பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் இலங்கையில் தரையிறக்க தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள.

சிவில் விமானப் போக்குவரத்து சேவையின் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

அதன்படி நாளை காலை 02.00 மணி முதல் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் எதுவும் இலங்கையில் தரையிறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அங்கு தற்போது பரவ ஆரம்பித்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு பல நாடுகளும் தடை விதிக்கின்ற நிலையில் இலங்கையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை அறவிடாமல் இருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் முன்னோடிக் கருத்திட்டமாக 2020 திசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, சுற்றுலாத்துறை அமைச்சும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையும் இணைந்து தயாரித்த விசேட நேர அட்டவணைகளுக்கமைய, சர்வதேச விமானக் கம்பனிகள் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது சர்வதேச விமானக் கம்பனிகள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளின் மத்தியில் சர்வதேச விமானக் கம்பனிகள் எமது நாட்டுக்கு மேற்கொள்ளும் விமானப் பயண நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விடுவிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.