அல் ஜஸீரா ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் இஸ்ரேலிய மென்பொருளால் ஊடறுப்பு

அல் ஜஸீரா ஊடகவியலாளர்களின் தொலைபேசிகள் இஸ்ரேலிய மென்பொருளால் ஊடறுப்பு

அல் ஜஸீரா (Al-Jazeera ) நிறுவன ஊடகவியலாளர்களின் 36 தொலைபேசிகள் அதிநவீன இலத்திரனியல் கண்காணிப்பு தொழில்நுட்பத்தினால் இடைமறிக்கப்பட்டுள்ளதாக கனடாவைத் தளமாகக் கொண்ட கணினிப்பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

கனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்திலுள்ள சிட்ஸன் லேப் எனும் ஆராய்ச்சி மத்திய நிலையமானது பல மாதங்களாக நடத்திய விசாரணைகளின பின்னர் இவ்விடயத்தை ஞாயிற்றுக்கழமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய நிறுவனமொன்றின் உளவு மென்பொருள் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இடைமறிப்பின் தாக்கம் தெளிவானதும் ஆபத்தானதுமாகும் என அல் ஜஸீராவின் புலனாய்வு செய்தியாளர் தமீர் அல் மிஷால் தெரிவித்துள்ளார். இவரின் தொலைபேசியும் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாக ஏ.எவ்.பி. தெரிவித்துள்ளது.

மக்களிடம் கருத்துக் கேட்பதற்காக பயன்படுத்தப்பட்ட சாதனமொன்றில் சந்தேகத்துக்கிடமான மெசேஜ் ஒன்று வந்ததையடுத்து, கடந்த ஜனவரி மாதம் மேற்படி கணினிப்பாதுகாப்பை அமைப்பை தான் நாடியதாக கத்தாரை தளமாக்க கொண்ட அல் ஜஸீரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அல் ஜெஸீரா வலையமைப்பின் பாதிக்கப்பட்ட ஐபோன்11 ரக தொலைபேசியொன்றை ஆராய்ந்தபோது, அதிலிருந்த உளவுப்பொருளானது மைக்ரோபோன் மற்றும் சுற்றுப்புற சத்தங்கள், கெமராவிலுள்ள படங்களை இடைமறிப்பது உட்பட பல்வேறு ஆற்றல்களைக் கொண்டிருந்ததாக சிட்டிஸன் லேப் எனும் மேற்படி ஆய்வகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தொலைபேசி சாதனத்தின் இருப்பிடம், கடவுச்சொற்கள் முதலானவற்றை அறியும் வசதியும் இருப்பதாக தான் நம்புவதாகவும் மேற்படி ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்கள், தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், நிறைவேற்று அதிகாரிகள் ஆகியோரின் 36 தொலைபேசிகளை தாம் ஆராய்ந்ததாகவும் சிட்டிஸன் லேப் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய மென்பொருள் நிறுவனமான என்.எஸ்.ஓ.வினால் (NSO) தயாரிக்கப்பட்ட பேகசஸ் (Pegasus spyware ) எனும் உளவு மென்பொருள் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிட்டிஸன் லேப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையையை தயாரித்தவர்களில் ஒருவரான பில் மார்க்ஸெக் இது தொடர்பாக கூறுகையில், ஸீரோ கிளிக் மோட் முறையில், அதாவது பாதிக்கப்பட்டவரின் (தொலைபேசி பாவனையாளரின்) எந்தவொரு இடையீடும் இன்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், கனேடிய நிறுவனத்தின் அறிக்கையானது ஊகத்தின் அடிப்படையிலானது எனவும், இதில் என்.எஸ்.ஓ நிறுவனத்தை சம்பந்தப்படுத்துவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தெரிவித்துள்ளது.