அனுசா சந்திரேசேகரனுக்கு கொலை அச்சுறுத்தல்?

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்ற மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புகார் வழங்கியுள்ளார்.

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் நேற்று மாலை பிரசாரக் கூட்டத்தை முடித்து அங்கிருந்து நுவரெலியா திரும்பிய வேளையில் இடைமறித்த கும்பல் தங்களை தாக்க முற்பட்டதாகவும், கடும் எச்சரிக்கையில் மிரட்டியதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அதேபோல, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திலும் அவர் முறையிட்டுள்ளார்.

இந்த சம்பவத்திற்குப் பின்னால் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் இருப்பதாக முறையிட்டுள்ள சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன், அதிகார அடக்குமுறையை அவர் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும் எமது செய்தி இணையத்தளத்திடம் தொடர்புகொண்டு கூறினார்.

மேற்படி வாகனத்தை வழிமறித்த கும்பலில் சிலர் தங்களால் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் சேர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பொலிஸார் எதுவித விசாரணையுமின்றி தனது ஆதரவாளர்களில் நால்வரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் இன்று பகல் இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.