05 மில்லியன் டொலர் கிடைக்கவில்லை – மைத்திரி மறுப்பு; முஸ்லிம் அமைப்பின் விளக்கம் இதோ!

உலக முஸ்லிம் லீக்கிடம் இருந்து ஐந்து மில்லியன் அமெரிக்க
டொலர் பெறப்பட்டதாக கூறப்படும் விடயத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்து ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக உலக முஸ்லிம் லீக், இலங்கைக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அளிப்பதாக உறுதிமொழி வழங்கியது.

கொழும்பு -நெலும் பொகுன அரங்கில் நடைபெற்ற அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான தேசிய மாநாட்டின் போது உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் அப்போதைய ஜனாதிபதி சிறிசேனாவிடம் ஒப்படைத்த ஆவணங்களில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் பணம் பெறப்பட்டதாகவும், பணத்திற்கு என்ன நடந்தது என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் குறித்த நிதியை பெற்றுக்கொள்ளவில்லை எனவும், இது உலக முஸ்லிம் லீக்கினால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

உலக முஸ்லிம் லீக் கோரிய சில தகவல்களை இலங்கை வழங்க தவறியமையின் காரணமாக குறித்த நிதியை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேவேளை,
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.ஜே.எம் முசம்மில் அவார்கள் இது தொடர்பில் விசாரித்து பார்த்தபோது முஸ்லிம் லீக் இந்த விவகாரம் குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கையை அனுப்பியுள்ளது.

அதன்படி, வழங்கப்பட்ட பணத்தை விடுவிப்பதற்கு இன்றியமையாத பின்வரும் தகவல்களை இலங்கை அரசு வழங்கவில்லை என்று முஸ்லிம் லீக் இன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

  1. தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை
  2. இறந்தவர்களின் மதம்
  3. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் பெயர்களின் பட்டியல்
  4. தாக்குதல்களால் சேதமடைந்த சொத்துக்கள் விபரம்.
  5. விதவைகளின் எண்ணிக்கை மற்றும் அனாதைக் குழந்தைகளின் எண்ணிக்கை
  6. பிற தொடர்புடைய தகவல்கள்
  7. ஜனாதிபதி அல்லது பிரதமரின் தொண்டு கணக்கு விவரங்கள் போன்றவை தமக்கு வழங்கப் படவில்லை என முஸ்லிம் லீக் இன் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுவரை இலங்கையில் எந்தவொரு தரப்பினருக்கும் வாக்குறுதியளிக்கப்பட்ட தொண்டு தொகையை அவர்கள் வழங்கவில்லை என்றும், பிரதமர் மற்றும் சமய விவகார அமைச்சருடன் தொடர்பு கொண்ட பின்னர் இந்த நடைமுறையை விரைவுபடுத்த அவர்கள் முன்வர உள்ளதாக முஸ்லிம் லீக் மேலும் தெரிவித்துள்ளது.