ஞானசார தேரருக்கு இன்று ஏற்பட்ட பெரும் ஏமாற்றம்

நான்கு மாவட்டங்களுக்கு தமது கட்சி தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஞானசார தேரர் வேட்பாளராகவுள்ள அபே ஜன பல கட்சியின் ரிட் மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் நீதிபதி சோபித ராஜகருணா ஆகியோரின் உத்தரவுக்கமைய இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களை விசாரிப்பதற்கான அறிவித்தல் விடுப்பதும் இதன் போது நீதிபதிகளினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குருணாகல், கொழும்பு, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அபே ஜன பல கட்சியின் ஞானசார தேரர் மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகிய வேட்பாளர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சத்தியக் கடதாசிகளில் சமாதான நீதவானின் கையொப்பங்கள் இல்லையென்ற காரணத்தினால் குறித்த வேட்புமனுக்கள் தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும் அவ்வாறு வேட்பு மனுக்களை நிராகரிக்கும் அதிகாரம் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு இல்லையெனவும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீள ஏற்றுக் கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும் ரிட் மனுவில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.