ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் வௌியாகியுள்ள மற்றொரு அதிர்ச்சி தகவல்

தேசிய தௌஹீத் ஜமா-அத்தின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் சூஃபி முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்காகப் பகிரங்கமாகவே துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதுடன், 2009 ஆம் ஆண்டிலேயே காத்தான்குடியிலுள்ள இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சிகளை வழங்கியதாக உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்நிலையில் தெரிவிக்கப்பட்டது.

பாரம்பரிய முஸ்லிம்களுக்கும், வஹாபிகளுக்கும் இடையிலான மோதல் குறித்து 2009 இல் சஹ்ரானைப் பேட்டிக்கண்ட ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையாளர் கிரிஷ் கமலேந்திரன் 2009 ஆகஸ்டில் தான் காத்தான்குடிக்கு விஜயம் செய்ததாக ஆணைக்குழுவிடம் கூறினார்.

கமலேந்திரன் சாட்சியமளிக்கையில் மேலும் கூறியதாவது:

நான் முதலில் சூஃபி முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தேன். சஹ்ரான் குழுவினர் சூஃபிகளுக்குச் சொந்தமான நூறுக்கும் அதிகமான சொத்துக்களைத் தாக்கிச் சேதப்படுத்தியதாக அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அதற்குப் பின்னர் நான் சஹ்ரானை அவரது சிறிய அலுவலகத்தில் சந்தித்தேன். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது அடுத்த அறையில் ரி – 56 ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

1990 இல் விடுதலைப் புலிகளினால் காத்தான்குடி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டு ஒருமாதத்திற்குப் பிறகு எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடாக ரணசிங்க பிரேமதாஸ நிர்வாகத்தின் போது காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அந்த நேரத்தில் சஹ்ரான் குழுவினர் பகிரங்கமாகவே ஆயுதங்களைப் பயன்படுத்தினர். கடற்கரையில் ஆயுதப்பயிற்சிகளை வழங்கினர். தென்னை மரங்களில் துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்கப்பட்ட ஓட்டைகள் காணப்பட்டன.

இவை பகிரங்கமாகவே நடைபெற்றன. சூஃபிகள் மீதான தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வந்தன.

அந்த நேரத்தில் மட்டக்களப்பின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த எடிசன் குணதிலகவிடமும் காத்தான்குடி உதவிப்பொலிஸ் அத்தியட்சர் கந்தே வசந்தவிடமும் அந்த சம்பவம் குறித்து நான் கேட்டேன்.

அதற்கு அவர்கள் தங்களுக்கு அந்தச் சம்பவங்கள் பற்றித் தெரியும் என்றும், ஆனால் அரசியல் நெருக்குதல்கள் காரணமாகத் தீவிரவாத நடவடிக்கைகளை அலட்சியம் செய்ததாகவும் கூறினார்கள்.

தாங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்போம் என்றும் அவர்கள் கூறினார்கள்.