ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் கோடிக்கணக்கான தோட்டாக்களையும் வழங்கியவர் பிரேமதாச

அண்மையில் என்னால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக கதைப்பதற்கு சஜித் பிரேமதாசாவுக்கோ அல்லது அனுரகுமார திசநாயக்கவுக்கோ எந்த விதமான அருகதையும் கிடையாது.

ஏனெனில் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் ஒரு கோடிக்கும் அதிகமான தோட்டாக்களையும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி விடுதலைப் புலிகளை ஊக்குவித்தவர். ‘

அதேபோன்று அநுரகுமார திசாநாயக்க மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இயக்கத்தினர் சுமார் 80,000 சிங்கள மக்களை கொன்று குவித்தவர்கள்.

இவர்கள் இருவருக்கும் நான் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசுவதற்கு எந்தவிதத்திலும் அருகதை கிடையாது என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அண்மையில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொடிய கொரோனாவை விடவும் கருணா கொடியவன் என்று விமர்சித்து இருந்தமைக்கு கருணா பதிலளிக்கையில்,

‘கொரோனா இலங்கையில் இதுவரை பதினொரு (11) பேரைக் கொன்றது. ஆனால் நான் அதனை விடவும் கொடியவன். ஒரே இரவில் ஆனையிறவு யுத்தத்தில் ஆயிரம், இரண்டாயிரம் இராணுவ வீரர்களைக் கொன்றவன்.

இன்னும் எத்தனையோ போராட்டங்களில் பல உயிர்களை காவு கொண்டவன் நான் என்று கூறியிருந்தார்’.

அந்த சர்ச்சைக்குறிய கருத்துக்கு எதிராக தற்போது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கையிலேயே கருணா அம்மான் இவ்வாறு கூறியுள்ளார்.

உண்மையில் நான் வேண்டும் என்று அந்தக் கருத்தைக் கூறவில்லை. எனது தேர்தல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஒரு நல்ல நோக்கத்திற்காக மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் தெரிவித்த கருத்து அது.

உண்மையில் யுத்தத்தில் இரு தரப்புமே இழப்புகளை சந்தித்தது. பாதுகாப்பு படையினரும் இறந்தனர். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இறந்தனர்.

அதில் ஒளித்து மறைக்க ஒன்றுமில்லை. அவ்வாறான கொடிய யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாகவே நான் கருத்தினைக் கூற முற்பட்டேன்.

என்னை ஹீரோவாக காட்ட முற்படவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் நிலைக்க வேண்டும்.

அவ்வுரையை திரிவுபடுத்துகிறார்கள். அத்தகைய கொடிய போராட்டத்திலிருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய என்னை இன்று விமர்சிக்க முற்படுகிறார்கள்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நான் ஜனநாயக வழிக்குத் திரும்பி அரசியல் கட்சியை ஆரம்பித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன்.

அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது தென்னிலங்கையில் தாங்கள் சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக என்னை விமர்சித்து, தமது தேவையை நிறைவேற்ற சிலர் முனைகின்றார்கள் என்று கருணா கூறியுள்ளார்.